

சட்ட மாணவர்கள் நடத்திய போராட்டம் | கோப்புப் படம்
புதுடெல்லி: சட்ட மாணவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் ‘பார் கவுன்சில் ஆஃப் இந்தியா’வுக்கு இல்லை என்றும், பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் விவகாரத்தில் மட்டுமே அதற்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டில் பட்டம் பெற உள்ள சட்ட மாணவர்களுக்கான பதிவை நிறுத்திவைக்கவும், இந்திய தலைமை நீதிபதிக்கு எதிராக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சாரம் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தவும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டிருந்தார்.
எனினும், ஒரு மணி நேரத்துக்குள்ளாக அவர் தனது உத்தரவை திரும்பப் பெற்றார். மேலும், தனது உத்தரவுக்காக மாணவர்களிடம் அவர் மன்னிப்பு கோரினார்.
எனினும், இவ்வாறு உத்தரவு பிறப்பிப்பதற்கு பிசிஐ-க்கு அதிகாரம் உள்ளதா என்பதை கேள்விக்கு உட்படுத்தி நல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான மஹிரா சூட், அபிஷேக் திவாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.பரமேஸ்வர், உத்தரவு திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், எந்த அதிகாரத்தின் கீழும் எந்த சட்ட விதியின் கீழும் பிசிஐ தலைவர் இந்த உத்தரவுகளை பிறப்பித்தார் என்பதை ஆராய்வது அவசியம் என்று வாதிட்டார்.
தான் பிறப்பித்த உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டதாகவும், பிசிஐ கூட்டத்துக்குப் பிறகு அந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டதாகவும் மனன் குமார் மிஸ்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகள் தாங்கள் அளித்த தீர்ப்பில், ‘சட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய பார் கவுன்சிலுக்கோ அல்லது மாநில பார் கவுன்சிலுக்கோ எந்த அதிகாரமும் இல்லை. வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ன் படி பிசிஐ-க்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு சட்ட பட்டதாரி வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்ட பிறகு மட்டுமே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகார வரம்பு பிசிஐ-க்கு கிடைக்கிறது.
சட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனம் அல்லது நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட தகுதியான அதிகாரி ஆகியோரிடம் மட்டுமே உள்ளது. மனன் குமார் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவுகள் எவ்வித சட்டப்பூர்வ அதிகாரமும் இன்றி பிறப்பிக்கப்பட்டவை’ என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, நல்சார் சட்டப் பல்கலைக்ககழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமை விருந்தினராக பங்கேற்க இருந்ததை எதிர்த்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர்களுக்கு எதிராக மனன் குமார் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்து பின்னர் அதனை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.