

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் தொழிலதிபர் ஒருவர் ரூ.7 கோடியை இழந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த 81 வயது தொழிலதிபரை, கடந்த 27-ம் தேதி மர்ம நபர் வாட்ஸ் அப் அழைப்பில் தொடர்பு கொண்டார். தன்னை மும்பை போலீஸின் மூத்த அதிகாரி என்று அறிமுகம் செய்த மர்ம நபர், தொழிலதிபரை மிரட்டும் தொனியில் பேசினார். தொழிலதிபர் பெயருக்கு தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு பார்சல் வந்திருப்பதாகவும் அந்த பார்சலில் போதைப் பொருட்கள் இருப்பதாகவும் மர்ம நபர் குற்றம் சாட்டினார். இதற்காக அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாகவும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் மிரட்டினார்.
கடந்த 28-ம் தேதி மற்றொரு மர்ம நபர் பேசினார். மும்பை போலீஸின் மூத்த அதிகாரி என்று கூறிய அந்த நபர், “பார்சலில் வந்த போதைப் பொருளுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருக்கிறது" என்று குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க தொழிலதிபரின் பெயரில் இருந்த மியூச்சுவல் பண்ட், வங்கிகளில் நிரந்தர வைப்பு தொகையைப் பணமாக மாற்ற மர்ம நபர் உத்தரவிட்டார். அதன்படி ரூ.7.12 கோடியை மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு தொழிலதிபர் அனுப்பி வைத்தார். கடந்த 29-ம் தேதி தொழிலதிபரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், மேலும் ரூ.1.2 கோடியை தருமாறு மிரட்டல் விடுத்தார்.
இதனிடையே தொழிலதிபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் விசாரணை நடத்திய போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஹைதராபாத் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.