பிரசாந்த் கிஷோருடன் தேஜ் பிரதாப் யாதவ் திடீர் சந்திப்பு: அரசியல் எதிர்காலம் குறித்து ஆலோசனை

பிரசாந்த் கிஷோருடன் தேஜ் பிரதாப் யாதவ் திடீர் சந்திப்பு: அரசியல் எதிர்காலம் குறித்து ஆலோசனை
Updated on
1 min read

பாட்னா: ஆர்ஜேடி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், ஜன்சக்தி ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அரசியல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோரை சந்தித்துப் பேசினார்.

பிரசாந்த் கிஷோருடனான தனது சந்திப்பின் சிறிய காணொலி ஒன்றை தேஜ் பிரதாப் யாதவ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டார்.

அந்தப் பதிவில், ‘மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் மாறிவரும் அரசியல் சமன்பாடுகள் குறித்து நாங்கள் விரிவாகப் பேசினோம். இந்தச் சந்திப்பு வெறும் சம்பிரதாயபூர்வமானது மட்டுமல்ல. மாறாக, வரும் காலங்களில் அரசியலின் திசையைத் தீர்மானிக்கக்கூடிய பல முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இது அமைந்திருந்தது.

இந்தs சந்திப்பை எனது அரசியல் வாழ்க்கையின் ஒரு முக்கியமான அனுபவமாகப் பார்க்கிறேன். இதன் மூலம், நேர்மறையான மனப்பான்மையுடனும், மக்கள் சேவை மனப்பான்மையுடனும் முன்னோக்கிச் செல்வதற்கான எனது உறுதிப்பாடு மேலும் வலுப்பெற்றுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவின் கட்சி படுதோல்வியடைந்த பிறகு, அரசியலில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடிப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகுவா தொகுதியில் போட்டியிட்ட தேஜ்பிரதாப் யாதவ், எல்ஜேபி வேட்பாளர் சஞ்சய் குமார் சிங்கிடம் 51,938 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அவர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். பிஹார் தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் படுதோல்வியை சந்தித்தது.

இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய அரசியல் விமர்சகர்கள், ஆளும் என்டிஏ மற்றும் எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணிக்கு எதிராக தேஜ் பிரதாப் மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் இணைந்து ஒரு கூட்டணியை அமைத்தால், அது மாநிலத்தில் ஒரு மூன்றாவது அணியாக உருவெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்தனர்.

பிரசாந்த் கிஷோருடன் தேஜ் பிரதாப் யாதவ் திடீர் சந்திப்பு: அரசியல் எதிர்காலம் குறித்து ஆலோசனை
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் - அமைதிப் பேச்சு தொடங்குவதில் சிக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in