

தேஜ் பிரதாப் யாதவ்
பாட்னா: பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மாநில அரசு உத்தரவிட்டதற்கு அவரது மகனும் ஜனசக்தி ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராப்ரி தேவியும் அவரது குடும்பத்தினரும் தற்போது பாட்னாவில் 10 சர்க்குலர் ரோடு பங்களாவில் வசித்து வருகின்றனர். இந்த பங்களா, பால் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் நந்த கிஷோர் ராமுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேஜ் பிரதாப் நேற்று கூறுகையில். “அரசு பங்களாவை எனது தாயார் காலி செய்ய வேண்டும் என பிஹார் அரசு 15 நாள் கெடு விதித்து நோட்டீஸ் அளித்துள்ளது. முன்னாள் முதல்வர்களான நிதிஷ் குமார், ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோரும் பாட்னாவில் அரசு பங்களாவில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இதுபோன்று நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்” என்றார். கடந்த வாரம் ராப்ரி தேவி அரசு பங்களாவை காலி செய்ய மறுத்ததை அடுத்து இந்த சர்ச்சை வெடித்தது.