

| படங்கள்: ம.பிரபு |
சென்னை: கோடை விடுமுறை முடிவடைந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகம், நோட்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கடந்த கல்வி ஆண்டில் (2025-26) பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்தவுடன், ஏப்.17 முதல் கோடை விடுமுறைவிடப்பட்டு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தந்ததால் மாணவ -மாணவிகள் உற்சாகமாகக் காணப்பட்டனர்.
அவர்களுக்கு பூங்கொத்து, மலர்கள், இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளிலேயே பாடப்புத்தகம், நோட்டு, புத்தகப் பை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவ-மாணவிகளுக்கு முதல்வர் விஜய், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “புதிய கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி.
உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இந்த உலகில் அழியாத ஒரே செல்வம் கல்வி மட்டும்தான். அந்த செல்வம் ஊற்றெடுக்கும் மணற்கேணி பள்ளிகள்தான்.
கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்களின் வாழ்க்கையில் வசந்தம் பிறக்கட்டும். குறிப்பாக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் கிடைக்கட்டும்; அதன்மூலம் அனைவருக்கும் கல்வி கிடைக்கட்டும்; தமிழகத்தில் கல்வி சிறக்கட்டும்” என கூறியுள்ளார்.