வாகன நிறுத்துமிட தகராறில் டெக் மஹேந்திரா முன்னாள் நிர்வாகி சுட்டுக் கொலை

உயிரிழந்த பரம்ஜீத்

உயிரிழந்த பரம்ஜீத்

Updated on: 
2 min read

புதுடெல்லி: டெக் மஹேந்திரா நிறுவனத்தின் முன்னாள் ஆசியப் பிரிவுத் தலைவர் ஹரியானாவின் பரீதாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் நாய் வளர்ப்பு மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடர்பான மோதலால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிங்கப்பூரில் தங்கி இருக்கும் டெக் மஹிந்திராவின் ஆசியப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பரம்ஜீத் தன்கர். இவர், ஹரியானாவின் பரீதாபாத்தில் உள்ள செக்டார் 21 சி பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் அவரது குடும்பத்தினர் தங்கி இருந்திருக்கிறார். பணி நிமித்தமாக சிங்கப்பூரில் வசித்து வந்த பரம்ஜீத் தன்கர் அடிக்கடி பரீதாபாத் சென்று வருவார்.

இந்த நிலையில் தனது உறவினரின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக, சிங்கப்பூரிலிருந்து நவம்பர் 5-ஆம் தேதி அவர் ஹரியானா திரும்பினார். பரம்ஜீத் குடும்பத்தினரின் திருமணம் நவம்பர் 24-இல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் நாய் வளர்ப்பது தொடர்பாக அண்டை வீட்டாருடன் பரம்ஜீத் குடும்பத்தினருக்கு மோதல் ஏற்பட்டது. இதில், நேற்று தன்தேரஸ் பண்டிகை தின இரவில் பரம்ஜீத் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்டை வீட்டில் இருக்கும் மோனு சர்மா என்பவர் பரம்ஜீத்தை 15 முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் 9 குண்டுகள் பாய்ந்ததில், பரம்ஜீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரைச் சுட்ட மோனு தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பரீதாபாத்தின் அந்த அடுக்குமாடிகள் கட்டிடத்தின் முதல் தளத்தில், குற்றம்சாட்டப்பட்ட மோனு சர்மாவின் குடும்பத்தினரும், பரம்ஜீத்தின் குடும்பத்தினர் மூன்றாவது தளத்திலும் வசித்து வந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சூரஜ்குண்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மோனு சர்மாவின் மகன், தனது செல்ல நாயை வாகன நிறுத்துமிடத்தில் மலம் கழிக்கும்படி அடிக்கடி அனுமதித்து வந்ததாகவும், இதை பரம்ஜீத்தின் மகன் சூர்யா பலமுறை ஆட்சேபித்ததாகவும் காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பும் இரு குடும்பத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்பு அது சமரசத்தில் முடிந்துள்ளது.

இந்தநிலையில், அங்குள்ள ஓர் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சி பெற்று வந்த பரம்ஜீத் நேற்று (நவ.6) இரவு சுமார் 8 மணியளவில் உடற்பயிற்சி கூடத்திலிருந்து வீடு திரும்பி உள்ளார். அப்போது, மோனு சர்மாவின் வாகனம் பரம்ஜீத்தின் வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்துள்ளார். அவரது வாகனத்தை அகற்றுமாறு பரமஜீத் கேட்டுக்கொண்டார்.

இது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறி தீவிர மோதலாக உருவானது. இதையடுத்து தன் வீட்டுக்கு சென்ற மோனு சர்மா தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியுடன் வாகன நிறுத்துமிடத்துக்கு வந்துள்ளார்.

மீண்டும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மோனு சர்மா, பரம்ஜீத் வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், சுமார் 15 ரவுண்டுகள் சுடப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதில் ஒன்பது குண்டுகள் பரமஜீத் மீது பாய்ந்த்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும், காவல் துறையினர், குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு, பல தோட்டா உறைகள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சூரஜ்குண்ட் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்றப் பிரிவினர் தலைமறைவாக உள்ள மோனு சர்மாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில், மோனு சர்மாவைக் கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>உயிரிழந்த பரம்ஜீத்</p></div>
உ.பி.யின் ‘கதை சொல்லி’ துறவி மீது பாலியல் வழக்கு பதிவு

X