

லக்னோ: உ.பி.யின் ஆசம்கரை சேர்ந்தவர் மவுலானா சம்சுல் ஹூடா கான். அரசு உதவி பெறும் மதரசா ஒன்றில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்தும், சர்வீஸ் ஆவணங்களை புதுப்பித்தும் வந்த இவர், இறுதியில் 2017-ல் முழுப் பலன்களுடன் விருப்ப ஓய்வு பெற்றார்.
ஆனால், ஹுடா 2007-ல் இங்கிலாந்தில் குடியேறி 2013-ல் அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். அவர் உ.பி.யில் பணியில் இல்லாதபோதும் ஓய்வூதியப் பலன்கள் தவிர, 10 ஆண்டுகளாக சம்பளம் பெற்றுள்ளார். இது தொடர்பாக அவருக்கு உதவிய சிறுபான்மையினர் நலத்துறையின் 4 மூத்த அதிகாரிகளை உ.பி. அரசு கடந்த நவம்பர் 22-ம் தேதி சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்க துறை நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் மத அமைப்புகளுடன் ஹுடா கானுக்கு தொடர்பு இருப்பது, அவர் ரூ.33 கோடி சொத்துகள் குவித்திருப்பது மற்றும் சந்தேகத்திற்குரிய நிறுவனங்களிடம் இருந்து அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.5 கோடி வந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஆய்வு செய்து வருகிறது.