

புது டெல்லி: மேகேதாட்டு அணை திட்ட விவகாரத்தில் தாக்கல் செய்த மனுவையும், மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக சீராய்வு மனு தாக்கல் செய்வதா, தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடுவதா என்பது குறித்து தீவிர ஆலோசனையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.
மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்குத் தடைவிதிக்கக் கோரி தமிழக அரசு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு கடந்த நவம்பர் 13-ம் தேதி விசாரித்தது.
தமிழ்நாடு அரசின் இந்த மனு அவசரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஏற்க முடியாது, காவிரி வழக்கின் தீர்ப்பின் படி தண்ணீரை திறக்க மறுத்தால் கர்நாடக அரசு நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும். மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த உத்தரவு காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாகவும், மேகேதாட்டு அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்து தமிழ்நாடு அரசின் சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுஆய்வு மனு இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், வி.எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி விசாரித்தது.
தீர்ப்பில், ‘‘மேகேதாட்டு அணை திட்டத்துக்கு எதிரான மனுவை நிராகரித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் மனுவை நீதிமன்றத்தில் விசாரிக்க விடுத்த தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 13 ம் தேதி கூறிய தீர்ப்பை ஆய்வு செய்வதற்கான முகாந்திரம் இல்லை.
இதன்படி தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்வதா, திட்டத்துக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடுவதா என்பது குறித்து தீவிர ஆலோசனையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.