“தமிழ் உலகின் பழமையான மொழி; தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது” - பிரதமர் மோடி!

Man Ki Baat

பிரதமர் மோடி

Updated on
1 min read

புதுடெல்லி: “தமிழ்மொழி உலகின் மிகவும் பழமையான மொழி. தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது. இன்று தேசத்தின் பிற பாகங்களிலும் கூட குழந்தைகள் - இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது” என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 129-வது அத்தியாயத்தில் இன்று (டிச.28) பிரதமர் மோடி ஆற்றிய உரையில், “2025-ன் பல கணங்கள் நமக்குப் பெருமிதத்தைச் சேர்த்தன. இந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூர், அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையின் அடையாளமானது.

2025-ம் ஆண்டு விளையாட்டுத் துறையில், நமது ஆடவர் கிரிக்கெட் அணியானது ஐசிசி சேம்பியன்ஸ் கோப்பையை வெற்றி பெற்றார்கள். பெண்கள் கிரிக்கெட் அணியும் கூட, முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றெடுத்தார்கள். பார்வைத்திறனில்லா மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தார்கள்.

விஞ்ஞானம் மற்றும் விண்வெளித் துறைகளிலும் கூட இந்தியா மிகப்பெரிய எல்லையைத் தாண்டியிருக்கிறது. சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் வரை சென்ற முதல் இந்தியர் ஆனார்.

மிகுந்த நம்பிக்கையோடு உலகம் இன்று இந்தியாவை உற்று கவனிக்கிறது. இந்தியாவின் மீது உலகு வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய காரணம் நமது இளைஞர்கள் சக்தியே. விஞ்ஞானத் துறையில் நமது சாதனைகள், புதிய புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத்தின் பரவல் ஆகியவை அனைத்தும் உலக நாடுகளை மிகவும் கவர்ந்திருக்கின்றன.

கடந்த மாதம் ஃபிஜியில் ஒரு பள்ளிக்கூடத்தில் முதன்முறையாக தமிழ் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தன்று குழந்தைகளுக்குக் கிடைத்த மேடையில் அவர்கள் தங்களுடைய மொழியின் பெருமை குறித்து தங்கு தடையின்று உரையாற்றினார்கள்.

குழந்தைகள் தமிழில் கவிதைகளை உரைத்தார்கள், சொற்பொழிவு ஆற்றினார்கள், தங்களுடைய கலாச்சாரத்தை, மெத்த தன்னம்பிக்கையோடு மேடையில் வெளிப்படுத்தினார்கள்.

தமிழ்மொழி உலகின் மிகவும் பழமையான மொழி. தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது. இன்று தேசத்தின் பிற பாகங்களிலும் கூட குழந்தைகள் - இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இதுதான் மொழியின் பலம், இதுவே தேசத்தின் ஒற்றுமை.

2025-ல் மனதின் குரலின் கடைசிப் பகுதி இது, நாம் 2026-ம் ஆண்டில், இதே உற்சாகம் - பேரூக்கத்தோடு, உள்ளார்ந்த உணர்வோடு நமது மனதின் குரலில் கண்டிப்பாக ஈடுபடுவோம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது உறுதிப்பாடு கண்டிப்பாக மெய்யாகும். இந்த நம்பிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பலமடைந்து வருகிறது. 2026ஆம் ஆண்டு, இந்த உறுதிப்பாடு மெய்யாகும் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Man Ki Baat
சம வேலைக்கு சம ஊதியம் கோரி 3-வது நாளாக போராட்டம்: சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in