‘‘இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியே தமிழ் கலாச்சாரம்’’ - பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உரை

பொங்கல் விழாவில் பிரதமர் மோடி

பொங்கல் விழாவில் பிரதமர் மோடி

Updated on
1 min read

புதுடெல்லி: “தமிழ் கலாச்சாரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல. அது இந்திய கலாச்சாரத்துடன் இணைந்தது” என்று டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் டெல்லி வீட்டில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழத்தின் பாரம்பரிய முறைப்படி, பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பானையில் பால் ஊற்றி பிரதமர் மோடி வழிபட்டார்.

இதனையடுத்து, மாடுகளுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, உணவளித்த பிரதமர், கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்த கொண்டாட்டத்தில், எல்.முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரும், பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்வில் அண்மையில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் நடித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி,“தமிழ் கலாச்சாரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல. அது இந்திய தேசத்தின் பகிரப்பட்ட பாரம்பரியம். உண்மையில் அது முழு மனிதகுலத்தின் பகிரப்பட்ட பாரம்பரியம். ஒரே பாரதம்; உன்னத பாரதம் என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தக் கூடியதாக பொங்கல் போன்ற பண்டிகைகள் உள்ளன.

பொங்கல் இன்று உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தினரும், தமிழ் கலாச்சாரத்தைப் போற்றுபவர்களும் இதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். நானும் அவர்களில் ஒருவன்.

இந்த சிறப்புமிக்க பண்டிகையை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவதை நான் ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். நமது வாழ்வில் பொங்கல் ஒரு இனிமையான அனுபவம் போன்றது. இது நமக்கு உணவை வழங்கும் விவசாயிகளின் கடின உழைப்பை பிரதிபலிக்கிறது, பூமிக்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கிறது. அதேநேரத்தில், இந்த திருவிழா இயற்கை, குடும்பம், சமூகம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேணுவதற்கான வழியை நமக்குக் காட்டுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு போன்ற பண்டிகைகளாலும் தற்போது நாட்டில் உற்சாகம் நிலவுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் வாழும் அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

இவ்விழாவில், நாட்டியம், இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

<div class="paragraphs"><p>பொங்கல் விழாவில் பிரதமர் மோடி</p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு; கிராம் ரூ.300-ஐ கடந்து மிரட்டும் வெள்ளி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in