

பெங்களூரு: மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசஃபூல் மாலிக் (25) என்பவர், பெங்களூரு ஜிகணி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், பொம்மசந்திரா தொழிற்பேட்டை பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு மாலிக்கின் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பாகிஸ்தான் ராணுவம் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் மசூதிகள் மீது நடத்தி வரும் தாக்குதல்களால் ஆத்திரமடைந்த மாலிக், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது.
இதற்காக, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ‘டெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பைச் சேர்ந்த இம்ரான் ஹைதர் என்பவருடன் பேஸ்புக் வாயிலாகத் தொடர்பில் இருந்துள்ளார். மேலும், ஆப்கானிஸ்தான் சென்று பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போராட விசாவுக்கு விண்ணப்பித்ததும், குடும்பச் சூழல் மற்றும் நிதி நெருக்கடி காரணமாகப் பயணத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டதும் விசாரணையில் அம்பலமானது.
அவரது செல்போனைக் கைப்பற்றி சோதனையிட்டதில், தீவிரவாத அமைப்புடன் அவர் மேற்கொண்ட உரையாடல்கள் மற்றும் குரல் பதிவுகள் சிக்கின. அவருக்கு வேறு ஏதேனும் சதித் திட்டங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.