

புதுடெல்லி: இந்தியாவின் 5-ம் தலைமுறை போர் விமானத் திட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், மேம்பட்ட நடுத்தர போர் விமானத்துக்கான (ஏஎம்சிஏ) உள்நாட்டு போர் விமான இன்ஜினை உருவாக்குவதற்காக இணைந்து செயல்படப் போவதாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டனின் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனங்கள் நேற்று முன்தினம் கூட்டாக அறிவித்தன.
போர் விமான இன்ஜின்களை வடிவமைத்தல், மேம்படுத்துதல், தயாரித்தல் மற்றும் விநியோகிப்பதற்கான இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, ஒரு பிரத்யேக விண்வெளி எரிவாயு டர்பைன் வளாகத்தை உருவாக்குவது குறித்து இரு நிறுவனங்களும் ஆராய உள்ளன. இந்த வளாகம் இந்தியாவின் மின்சார மற்றும் உந்துவிசை தொழில்நுட்ப மையமாக விளங்கும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) கீழ் இயங்கும் வானூர்தி மேம்பாட்டு முகமை (ஏடிஏ), ஏஎம்சிஏ திட்டத்தை அதிகாரப்பூர்வமாக வடிவமைத்து நிர்வகித்து வருகிறது. ஆரம்பகால திட்டமிடலின்படி, ரூ.15,000 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் முதல் 5 ஏஎம்சிஏ மாதிரிகளுக்காக, இறக்குமதி செய்யப்பட்ட அமெரிக்காவின் ஜிஇ எப்414 இன்ஜின்களுடன் ஏடிஏ தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது.