தூய்மை இந்தியா ஊரகத் திட்டம் 2028 வரை நீட்டிப்பு: பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு

தூய்மை இந்தியா ஊரகத் திட்டம் 2028 வரை நீட்டிப்பு: பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு
Updated on: 
1 min read

புதுடெல்லி: மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா ஊரக (கிராமின்) இரண்டாம் கட்ட திட்டம் வரும் 2028-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, இத்திட்டத்தை நீட்டிக்கக் கோரி நிதி அமைச்சகத்தை அணுகிய நிலையில் கடந்த

செவ்வாய்க்கிழமை இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “நாடு முழுவதிலும் உள்ள எஞ்சிய அனைத்து கிராமங்களும் வரும் 2028-ம் ஆண்டு மார்ச் 31-க்குள் ‘திறந்தவெளி கழிப்பிடம் அற்ற நிலையைத் தாண்டிய' சான்றிதழைப் பெறுவதை குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை உறுதி செய்ய வேண்டும். 2028-ம் ஆண்டு மார்ச் 31-க்குப் பிறகு இத்திட்டத்துக்கு மேலும் காலநீட்டிப்பு எதுவும் வழங்கப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையைத் தொடர்ந்து தக்கவைத்து திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை முறையாகச் செயல்படுத்தி தூய்மையாக இருக்கும் கிராமங்களே ‘ஓடிஎப் பிளஸ்' கிராமங்களாக வரையறுக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மொத்தம் 5.86 லட்சம் கிராமங்களில் இதுவரை 5.70 லட்சம் கிராமங்கள் ‘ஓடிஎப் பிளஸ்' நிலையை அடைந்துள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020-21 முதல் 2025-26 வரையிலான 6 ஆண்டுகளில் மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து ரூ.28,726 கோடி இத்திட்டத்திற்காகச் செலவிடப்பட்டுள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டுக்கு ரூ.7,192 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்துக்கான செலவினங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களில் மத்திய அரசு 60%, மாநில அரசு 40% என்ற அளவில் பகிரப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரையில் 100 சதவீத முழு நிதியையும் மத்திய அரசே வழங்குகிறது.

தூய்மை இந்தியா ஊரகத் திட்டம் 2028 வரை நீட்டிப்பு: பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு
‘இலவச வேட்டி, சேலைகளை வெளி மாநிலத்தில் வாங்கவில்லை’ - அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்

X