

கொல்கத்தா: பிரதமர் மோடி முன்னிலையில் மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி நேற்று பதவியேற்றார்.
மேற்கு வங்கத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் மே 21-ம் தேதி மறுதேர்தல் நடத்தப்பட உள்ளது. மீதமுள்ள 293 தொகுதிகளில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றியது. மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுக்கு 80 தொகுதிகள் கிடைத்தன. காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன.
இதைத் தொடர்ந்து கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக அவர் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நேற்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி முன்னிலையில் மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பாஜக மூத்த தலைவர்கள் திலீப் கோஷ், அக்னிமித்ரா பால், அசோக் கீர்தானியா, குதிராம் துடு, நிஷித் பிரமானிக் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தலைவணங்கிய பிரதமர் மோடி: தேசிய கவிஞர் ரவீந்திர நாத் தாகூரின் 165-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாஜக அரசு பதவியேற்பு விழாவில் தாகூரின் பிரம்மாண்ட உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அவரது படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சுவேந்து அதிகாரி மலர் தூவி மரியாதை செலுத்தினர். பதவியேற்பு விழாவுக்கு முன்பாக பிரதமர் மோடி மேடையில் மண்டியிட்டு மேற்கு வங்க மக்களுக்கு தலைவணங்கி நன்றி செலுத்தினார்.
மேற்குவங்க அரசியல் வன்முறையில் உயிரிழந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
முன்னதாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘மேற்கு வங்க முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரியை வாழ்த்துகிறேன். அவர் மக்களின் தலைவர். அவர்களின் விருப்பங்களை அறிந்த தலைவர். அவர் நல்லாட்சி நடத்த வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு சுவேந்து அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த நாள் நாட்டுக்கும், மேற்கு வங்கத்துக்கும் மிகவும் முக்கியமான நாள். சியாமா பிரசாத் முகர்ஜியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு பாஜக செயல்படுகிறது. நான் முதல்வராக பதவியேற்று உள்ளேன். இப்போது நான் அனைவருக்கும் பொதுவானவன்.
மேற்கு வங்கம் சீர்குலைந்திருக்கிறது. கல்வி, கலாச்சாரம் சீர்குலைந்திருக்கிறது. மேற்கு வங்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம். இவ்வாறு முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், ராம் மோகன் நாயுடு மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஒடிசா முதல்வர் மோகன் மாஜி, பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, நாகாலாந்து முதல்வர் நெப்பியூ ரியோ, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.