

மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மேற்குவங்க முதல்வராக தேர்வாகி உள்ள சுவேந்து அதிகாரி
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சுவேந்து அதிகாரி இன்று காலை முதல்வராகப் பதவியேற்கிறார்.
மேற்குவங்கத்தில் கடந்த ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டன. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 293 தொகுதிகளில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலிட பார்வையாளராக பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக சுவேந்து அதிகாரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மேற்குவங்கத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மத்திய அமைச்சர் அமித் ஷா கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை, சுவேந்து அதிகாரி தோற்கடித்தார். தற்போது பவானிபூர் தொகுதியில் மம்தாவை அவர் தோற்கடித்திருக்கிறார். பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த பவானிபூர் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த 1967-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அந்த மாநிலத்தில் வாக்கு திருட்டு நடைபெறுகிறதா?
கடந்த 42 ஆண்டுகளாக சிக்கிமில் காங்கிரஸ் முதல்வர் இல்லை. கடந்த 36 ஆண்டுகளாக பிஹாரில் காங்கிரஸ் முதல்வர் பதவியேற்க முடியவில்லை. குஜராத்தில் 30 ஆண்டுகள், ஒடிசாவில் 26 ஆண்டுகள், நாகாலாந்தில் 23 ஆண்டுகள், மகாராஷ்டிராவில் 12 ஆண்டுகள் வரை காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டு உள்ளது
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2014-ம் ஆண்டில்தான் ஆட்சி அமைத்தது. அதற்கு முன்பிருந்தே பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவி வருகிறது. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தொடர்ந்து பின்னோக்கி செல்கிறது. அவரது தலைமையால் தற்போது இண்டியா கூட்டணியும் உடைந்திருக்கிறது. தேர்தல் தோல்விகள் குறித்து காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ஒரு காலத்தில் மேற்குவங்க சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 77 எம்எல்ஏக்களாக உயர்ந்தது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் 207 பாஜக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 9 மாவட்டங்களில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.
இனிமேல் மேற்குவங்கத்துக்குள் ஊடுருவல்காரர்கள் நுழைய முடியாது. இங்குள்ள ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள். அடுத்த சில மாதங்களில் சமூகவிரோத கும்பல்கள் ஒழிக்கப்படும். மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு சீரடையும். இரட்டை இன்ஜின் ஆட்சியால் மேற்குவங்கம் அதிவேகமாக முன்னேறும்.
இதுவரை 20 மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. தற்போது 21-வது மாநிலமாக மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைகிறது. இதற்காக ஒட்டுமொத்த மேற்குவங்க மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமித் ஷா பேசினார்.