

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பவானிப்பூர் முக்கியமான தொகுதியாகும். கடந்த 2021 தேர்தலில் நந்தி கிராம் தொகுதியில், பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். அதன்பின் அவர் பவானிப்பூர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று முதல்வராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பவானிப்பூரில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று மனுத்தாக்கல் செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ஊர்வலமாக சென்றார். இருவரும் பவானிப்பூரில் வாகனப் பேரணி சென்றனர். அப்போது பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வாகன பேரணிக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘பாஜக வாழ்க’ என்ற கோஷங்கள் முழங்க தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர். ஹஸ்ரா பகுதியில் பாஜக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் அமித் ஷா சுவேந்து அதிகாரியின் மனுத்தாக்கலுக்காக பவானிப்பூர் வந்ததாக குறிப்பிட்டார்.
மேளங்கள் மற்றும் தொண்டர்கள் கோஷங்கள் முழங்க சுவேந்து அதிகாரி மற்றும் அமித்ஷாவின் வாகனம் காலிகாட் பகுதியை கடந்து சென்றது. அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில்தான் முதல்வர் மம்தா பானர்ஜியின் வீடு உள்ளது. அங்கு திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் கட்சி கொடியுடன் நின்றிருந்தனர். பாஜக தொண்டர்களை பார்த்து அவர்கள் ‘ஜெய் பங்களா, மம்தா பானர்ஜி வாழ்க’ என கோஷம் எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீஸார் மனித சங்கிலி அமைத்து இரு கட்சியினர் இடையே மோதல் நடைபெறாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பவானிப்பூரில் வாகன பேரணி முடிந்ததும் சர்வே கட்டிட அலுவலகத்தில் சுவேந்து அதிகாரி மனுத்தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.