

புனே: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81.
இதுகுறித்து குடும்ப வட்டாரங்கள் கூறுகையில் “வயோதிகம் காரணமாக நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சுரேஷ் கல்மாடி நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் காலமானார்” என்று தெரிவித்தன.
சுரேஷ் கல்மாடியின் உடல் மகாராஷ்டிர மாநிலம் எரண்ட்வானே பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நவி பேட்டையில் உள்ள வைகுண்ட மயானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. புனேயின் முக்கிய அரசியல் பிரமுகரான கல்மாடி அங்குள்ள மக்களின் ஆதரவைப் பெற்று பலமுறை மக்களவைக்கு தேர்வானவர்.
ரயில்வே துறைஇணை அமைச்சராகப் பணியாற்றிய கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “புனே நகரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவர். இதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். நாடு ஒரு அனுபவமிக்க தலைவரை இழந்துவிட்டது” என்றார்.
விளையாட்டில் முத்திரை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (பவார்) தலைவர் சரத் பவார் கூறுகையில், “கல்மாடி தனது வாழ்க்கையை இந்திய விமானப் படையில் ஒரு விமானியாக தொடங்கினார். பின்னர், புனே நகரின் மீதுள்ள பற்றால் அரசியல், கலாச்சார, விளையாட்டு தளங்களில் ஒரு ஆழமான முத்திரையை பதித்தார். புனே விழா மற்றும் புனே சர்வதேச மாரத்தான் போன்ற முயற்சிகள் மூலம், புனே நகருக்கு தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்றுத் தருவதில் கல்மாடி முக்கிய பங்காற்றியவர். பொது வாழ்வில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட தலைவரை நாடு இழந்துவிட்டது” என்றார்.