

பெங்களூரு: கர்நாடகாவில் அதிக நாட்கள் முதல்வராக ஆட்சி செய்தவர் என்ற சாதனைக்கு தேவராஜ் அர்ஸ் (2,789 நாட்கள்) சொந்தக்காரராக இருந்தார்.
தற்போதைய முதல்வர் சித்தராமையா நேற்றுடன் அந்த சாதனையை முறியடித்து 2,790 நாட்களை கடந்து, முதல்வராக தொடர்கிறார். இதையடுத்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் உள்ளிட்டோர் சித்தராமையாவை சந்தித்து வாழ்த்தினர்.
பின்னர் முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''நான் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தபோது எம்எல்ஏ ஆவேன்; அமைச்சர் ஆவேன் என கனவிலும் நினைத்ததில்லை. எம்எல்ஏ ஆனபோது முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. மக்களின் ஆசீர்வாதத்தால் எனக்கு முதல்வர் பதவி கிடைத்தது.
தற்போது கர்நாடகாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த முதல்வராக மாறி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேவராஜ் அர்ஸின் சாதனையை முறியடித்தது சாதாரண நிகழ்வுதான். அதனால் அவருக்கு எந்த மரியாதைக்குறைவும் இல்லை. அவர் கர்நாடக அரசியலில் பெரும் சாதனை படைத்தவர். அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம்" என்றார்.