

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த சிறப்பு பணிகளில் (எஸ்ஐஆர்) ஒத்துழைக்காத மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தச் சூழ்நிலையை சிறப்பாக கையாள வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு, உத்தர பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட 11 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள்(பிஎல்ஓ) மிரட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் உள்ளூர் அரசியல்வாதிகள் அல்லது நிர்வாகத்தின் ஒத்துழையாமை காரணமாக எஸ்ஐஆர் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: எஸ்ஐஆர் பணிகளுக்கு ஒத்துழையாமை, பிஎல்ஓக்கள் பணியை மேற்கொள்ளவிடாமல் தடுக்கப்படுவது போன்றவை குறித்து எங்கள் கவனத்துக்கு தேர்தல் ஆணையம் கொண்டு வரவேண்டும். அதுபோன்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் உரிய ஆணைகளைப் பிறப்பிக்கிறோம்.
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு மாநில அளவில் எதிர்ப்பு அதிகரிக்கும் போக்கைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் மாநில அரசுகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அப்படி இல்லாத மாநிலங்கள் குறித்து தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தால் தகுந்த உத்தரவை நாங்கள் பிறப்பிப்போம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதி ஜோய்மால்யா பாக்சி கூறும்போது, ‘‘எஸ்ஐஆர் பணிகள் என்பது அலுவலக மேஜையில் அமர்ந்துகொண்டு அதிகாரிகள் பணியாற்றுவது போன்றது அல்ல. ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர்கள் குறித்த விவரங்களை பிஎல்ஓக்கள் சேகரிக்க வேண்டும். அதனால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, பிஎல்ஓக்களை பணி செய்வதை யாரும் தடுக்கக்கூடாது.
எஸ்ஐஆர் பணிகள் அடிப்படை நிலையில் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் நடைபெற வேண்டும். இதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இந்தப் பணிகளுக்கு எந்தவிதத் தடையும் வரக்கூடாது. பிஎல்ஓக்களுக்கு மிரட்டல் விடுப்பது தொடர்பாக எங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தால் தகுந்த உத்தரவைப் பிறப்பிப்போம். மேலும், சூழ்நிலையை சிறந்த முறையில் தலைமைத் தேர்தல் ஆணையம் கையாள வேண்டும்” என்றார்.