

புதுடெல்லி: ஹைதராபாத்தில் உள்ள தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவுக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அழைக்கப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து துணை வேந்தருக்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் இறங்கினால், அவர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது என்று, இந்திய பார் கவுன்சிலின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான மன்னன் குமார் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்ததோடு, தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 2026-ம் ஆண்டு மாணவர்களை மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய கூடாது என்று ஒரு சுற்றறிக்கையும் அனுப்பினார். இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், பார் கவுன்சில் அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்கறிஞர் பரமேஷ்வர் மற்றும் வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.
அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், இது மாணவர்களுக்கும் தனக்குமான விவகாரம் என்றும், இதில் இந்திய பார் கவுன்சின் ஏன் தலையிட்டது? என கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறியதாவது: மாணவர்களுக்கு போராடும் உரிமை உள்ளது, அவர்களை பார் கவுன்சிலால் தடுக்க முடியாது. நான் மாணவனாக இருந்த போதும் மாணவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். ஜனநாயக முறையில் அமைதியாக போராடும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும். பார் கவுன்சிலோ, வேறு அமைப்புகளோ இதில் தலையிட தேவை இல்லை. மாணவர்கள் நேரடியாக எனக்கு கடிதம் எழுதலாம்.
தேசிய சட்டப் படிப்பு மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்து விரைவில் வழக்கறிஞராக பதிவு செய்ய வேண்டும். அவர்களை உடனடியாக சட்ட உதவி மையத்தில் பணி அமர்த்த தயாராக உள்ளேன். இவ்வாறு தெரிவித்த தலைமை நீதிபதி, பார் கவுன்சில் வெளியிட்ட சுற்றறிக்கை குறித்து விளக்கம் அளிக்க இந்திய பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.