புதுடெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது என்றும், இன்று இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக மட்டுமல்லாமல், மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார சக்தியாகவும் திகழ்கிறது என்று இந்தியா வந்துள்ள பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து இரு தரப்பு உயர் மட்டத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டுச் சந்திப்பும் நடைபெற்றது. இதில், இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பார்ட் டி வெவர், “கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா வந்துள்ள முதல் பெல்ஜியம் பிரதமர் நான். எனது இந்த வருகை மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 20 ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம். இந்த 20 ஆண்டுகளில் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா மிகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது.
இன்று இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக மட்டுமல்லாமல், மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார சக்தியாகவும் திகழ்கிறது. ஒரு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லரசாகவும், உலக அளவில் வலுவான குரலைக் கொண்ட ஒரு முக்கிய புவிசார் அரசியல் சக்தியாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.
பெல்ஜியத்தைப் பொறுத்தவரை, எங்களுக்கு இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி. இந்தியாவுக்கு அளிக்க எங்களிடம் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்று நான் நம்புகிறேன். அளவின் அடிப்படையில் நாங்கள் சிறிய நாடாக இருந்தாலும், உலகிலேயே மிகவும் வெளிப்படையான, சர்வதேச அளவில் வலுவான தொடர்புகளைக் கொண்ட பொருளாதாரங்களில் ஒன்றாக நாங்கள் திகழ்கிறோம்.
எனது வருகையின் நோக்கம் வர்த்தகத்தைத் தாண்டி விரிவானது. பெல்ஜியம் மற்றும் இந்தியா இடையிலான உறவை பொருளாதாரம், அரசியல் மற்றும் உத்தி ரீதியாக அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல நாங்கள் விரும்புகிறோம்.
இன்று நாம் நிச்சயமற்ற உலகில் வாழ்கிறோம். செழிப்பும் பாதுகாப்பும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. எங்கள் உறவு ஏற்கனவே ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான வர்த்தகம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது.
235 பெல்ஜிய நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த 95 நிறுவனங்கள் பெல்ஜியத்தில் செயல்பட்டு வருகின்றன. சரக்குகள் சார்ந்த இருதரப்பு வர்த்தகம் 9.4 பில்லியன் யூரோக்களாக உள்ளது. இதில் மேலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நான் கருதுகிறேன்.
ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பெல்ஜியத்தில் கையெழுத்தாக உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடியை எனது நாட்டில் வரவேற்கும் பெருமையும் எங்களுக்கு கிடைக்கும். பிரதமர் மோடியுடன் உரையாடலைத் தொடர அவரது வருகை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும். இன்று நாம் ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்டுள்ளோம். நமது உறவின் மிகச் சிறந்த கட்டம் இனிமேல்தான் வர இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
இந்தியா அபாரமான அளவு, திறமை, லட்சியத்தைக் கொண்டுள்ளது. பெல்ஜியம் தொழில்நுட்பம், சிறப்பு நிபுணத்துவம், அனுபவம் மற்றும் ஐரோப்பாவுக்கான அணுகலை வழங்க முடியும். இதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.