பொது இடங்களில் இருந்து தெரு நாய்களை அப்புறப்படுத்தும் உத்தரவை திரும்பப்பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு

பொது இடங்களில் இருந்து தெரு நாய்களை அப்புறப்படுத்தும் உத்தரவை திரும்பப்பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு அவற்றை மீண்டும் பொது இடங்களில் விடக்கூடாது என்ற தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு அனைத்து மனுக்களையும் இன்று (மே 19) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், “தெருநாய்கள் தொடர்பாக 2025, நவம்பரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு திரும்பப் பெறப்பட மாட்டாது. பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு அவற்றை மீண்டும் பொது இடங்களில் விடக்கூடாது. மாறாக அத்தகைய நாய்களை பாதுகாப்பு இல்லங்களில் அடைத்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள், முதியவர்கள், பயணிகள் மீது நாய்கள் நடத்திய தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியவை. இந்த அச்சுறுத்தல் விமான நிலையங்களையும், குடியிருப்புப் பகுதிகளையும் எட்டிவிட்டது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறும் அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும், வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், வெறிநாய்க்கடி நோய் தாக்கிய ஆபத்தான நாய்களை கருணைக்கொலை செய்வது உள்ளிட்ட சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுவதை உயர் நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும். தேவை எனில், தாமாக முன்வந்து வழக்குகளைப் பதிய வேண்டும்” என தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் இருந்து தெரு நாய்களை அப்புறப்படுத்தும் உத்தரவை திரும்பப்பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு
அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in