

புதுடெல்லி: பத்திரிகையாளர் நிகில் வாக்லே சமூக வலைதளத்திலும், சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்கள் சந்திப்பிலும் நீதிபதிகள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாக உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல்.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகில் வாக்லே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ‘‘அந்தச் சமூக வலைதளப் பதிவு உடனடியாக நீக்கப்பட்டதோடு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், உடல்நலக் குறைவு காரணமாக அவரை காணொலி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும்’’ என கோரினார். அப்போது நீதிபதிகள், ‘‘சஞ்சய் ராவத் தரப்பில் எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லையா?’’ என கேள்வி எழுப்பியதோடு, இந்த வழக்கு தொடர்பாக நவ.17-ம் தேதியன்று சஞ்சய் ராவத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், நிகில் வாக்லே காணொலி வாயிலாக ஆஜராகவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.