

புதுடெல்லி: ‘‘காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்’’ என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைக் கர்நாடக அரசு திறந்து விடக் கோரியும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை
எதிர்த்தும் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மற்றும் திமுக தொடர்ந்த மனு ஆகியவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, ‘‘காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடக அரசு எப்போதும் செயல்படுத்துவதில்லை. தற்போது கர்நாடக அணைகளில் 76 சதவீதம் அளவுக்குத் தண்ணீர் இருப்பு இருந்தும், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்காமல் இருப்பதால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
கர்நாடக அரசு மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘‘இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் பின்பற்றப்பட்டன. முதலில் கடந்த ஜூலை 30-ம் தேதி வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், அதை விட அதிகமான நீர் தமிழகத்துக்குத் திறக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,000 கன அடியை விட அதிகமான அளவு தண்ணீர் தமிழகத்துக்குத் திறக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘கர்நாடகா சார்பில் அதிகளவிலான நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் எப்படி தண்ணீர் வரவில்லை என்று கூறுகிறீர்கள்?’’ என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், ‘‘கடவுள் அருளால் சமீபத்தில் கபினி உள்ளிட்ட பகுதிகளில் மழை அதிகமாகப் பெய்ததால் கிடைத்த உபரி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் எதையும் கர்நாடகா முறையாகச் செயல்படுத்தவில்லை’’ என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், விகிதாச்சாரப்படி முந்தைய பற்றாக்குறை நீர் மற்றும் ஆகஸ்ட் 31-க்குள் தரவேண்டிய நீர் என மொத்தம் 36.635 டிஎம்சி நீரைத் தமிழ்நாடு பெறுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘கர்நாடகாவில் தற்போது மழை நிலவரம் நன்றாக இருப்பதால், இந்த வழக்கை ஒரு வாரத்துக்குப் பின்னர் விசாரிக்கலாம்’’ என்று கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், “வழக்கு விசாரணை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள வினாடிக்கு 12,000 கன அடி நீர் என்ற உத்தரவை கட்டாயம் கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.