

புதுடெல்லி: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் ஆகியோருக்கு எதிரான வழக்கில், மாநில அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சிஎம்ஆர்எல் என்ற தனியார் நிறுவனம், பினராயி விஜயனின் மகள் வீணாவின் 'எக்ஸா லாஜிக் சொலூஷன்ஸ்' என்ற மென் பொருள் நிறுவனத்துக்கு ஆலோசனை சேவை என்ற பெயரில்எந்தவொரு சேவையும் பெறாமல் முறைகேடாக ரூ.2.78 கோடி பணப்பட்டுவாடா செய்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
பினராயி விஜயன் முதல்வ ராக இருந்த காலத்தில் அரசு ரீதியாக அளிக்கப்பட்ட சலுகைகளுக்காக இந்த லஞ்சப் பணம் கைமாறியதாக வழக்கறிஞர் கே.எம். ஷாஜகான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜாய் மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவசரமாக விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்? முன்னாள் முதல்வருக்கு எதிரான வழக்கில் உரிய முன் அனுமதி இல்லாமல் எவ்வாறு விசாரணையைத் தொடர முடியும்?" என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு ஒருவாரம் தடை விதிக்கப்படுவதாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில் வழக்கில் நிவாரணம் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகவும் பினராயி விஜயன் தரப்புக்கு அனுமதி அளித்தனர்.