

புதுடெல்லி: என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பகுதி இடம்பெற்றிருந்தது கடந்த பிப்ரவரி மாதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்த உச்ச நீதிமன்றம், புத்தக தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கு தடை விதித்தது. அந்தப் பாடத்தை உருவாக்கிய மைக்கேல் டேனினோ, சுபர்ணா திவாகர், அலோக் பிரசன்ன குமார் ஆகிய 3 கல்வியாளர்களும் இனி பாடத்திட்ட தயாரிப்பு பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 3 கல்வியாளர்களும் அரசுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கல்விசார் பணிகளில் ஈடுபட விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றது.
மேலும், அவர்கள் ‘‘வேண்டுமென்றே அல்லது தெரிந்தே உண்மைகளைத் தவறாக சித்தரித்துள்ளனர்’’ என்ற தனது முந்தைய கருத்தை திரும்பப் பெற்றது. மனுதாரர்கள் அளித்த விளக்கத்தை கருத்தில் கொண்டு, முந்தைய உத்தரவின் 8-வது பத்தியை மாற்றி அமைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.