

புதுடெல்லி: கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளித்து, கடந்த 2018-ல் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரிக்க தொடங்கியுள்ளது.
2-வது நாளான நேற்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மத வழக்கங்கள் மூட நம்பிக்கையா என்பதை நீதிமன்றங்கள் முடிவு செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றங்களுக்கு போதிய புலமை இல்லை. மாறாக அந்த மதத்தின் வழிபாட்டு ஆவணங்களை ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்" என வாதிட்டார். அப்போது, நீதிபதி ஏ.அமானுல்லா, "மத மூட நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் வரையறை செய்ய முடியும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து துஷார் மேத்தா வாதிடுகையில், "அரசுக்கு சொந்தமான கோயில்களில் பூசாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்க முடியாது. கடவுள் நம்பிக்கை அற்ற, கடவுள் நம்பிக்கை உள்ள அரசுகள் கூட கோயில்களில் பூசாரிகளை நியமிக்க முடியாது. கோயில் பூசாரிகள் பாரம்பரியமாக நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அரசு விவகாரங்களில் மதம் தலையிடாதபோது, மத விவகாரங்களில் அரசும் தலையிடக்கூடாது. அரவிந்தரை பின்பற்றுவோர் ஒரு மதப் பிரிவினராக உள்ளனர்" என்றார்.