

திருப்பரங்குன்றம் தீபத்தூண்
கோப்புப் படம்
புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது. எனினும், இந்த அனுமதி என்பது இந்த வழக்கின் இறுதி ஒப்புதலாகக் கருதப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், கார்த்திகை திருநாளன்று பக்தர்கள் அனைவரையும் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரியும், தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்ற சரத்துக்கு எதிராகவும் ராம ரவிக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரு தரப்பும் மூன்று நாட்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று (நவம்பர் 24) தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது. இது இந்த வழக்கின் இறுதி ஒப்புதலாகக் கருதப்படக்கூடாது.
தேவஸ்தானம் மற்றும் அரசு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விளக்கு ஏற்றுவதற்கு செல்ல முடியும். பொதுமக்கள் செல்ல முடியாது. தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பும் முன்வைத்த வாதங்கள்:
மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் நேற்று முன்தினம் முன்வைத்த வாதத்தில், ‘‘தர்கா அருகே உள்ள கல்தூண் தீபத்தூண் கிடையாது. அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலங்களை அளவீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட எல்லைக் கல்.
தமிழகத்தின் பல்வேறு மலைப் பகுதிகளிலும் இதுபோன்ற நில அளவீட்டுக் கற்கள் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்தூணும் இன்று வரை நில அளவீட்டுக் கல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்தூண் பகுதிக்குச் செல்வதற்கான வழி தர்கா நிர்வாகத்துக்குச் சொந்தமானது’’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘‘அந்தக் கல்தூண் அமைந்துள்ள இடம் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானதா, இல்லையா?’’ என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ‘‘அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிக்கிறோம்’’ என்று மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறினார். இந்த பதிலில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘‘மாவட்ட ஆட்சியர் என்ற முறையில், அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதை ஒரே வார்த்தையில் கூறுங்கள்’’ என்று மீண்டும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘அந்த இடம் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானதுதான்’’ என்று தெரிவித்தார்.
அதன்பின்னர், சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹசீஃபா அகமதி, ‘‘மன்னர்கள் காலம் தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் இந்திய அரசாங்கத்தின் காலம் வரையிலான ஆவணங்களில் தர்காவுக்குச் சொந்தமான நிலங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 1862 முதல் 1923-ம் ஆண்டு வரையிலான உத்தரவுகள் தற்போதைய வழிபாட்டு நடைமுறைகளை உறுதிப்படுத்துகின்றன. நெல்லித்தோப்பு முதல் தர்கா வரையிலான பகுதி, படிக்கட்டுகள், தர்கா அமைந்துள்ள இடம் மற்றும் கொடியேற்றும் பகுதி ஆகியவை தர்காவுக்குச் சொந்தமானவை.
கல் தூணுக்கும் தர்காவுக்கும் 20 மீட்டர் தொலைவுதான் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் எங்களது தரப்புதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நேற்று (நவ.19) பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.
நேற்று 3-வது நாள் விசாரணையின்போது, சிக்கந்தர் தர்கா அருகில் தீபம் ஏற்றக் கூடாது என வலியுறுத்தி அரங்கநாதன் என்பவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹூடா வாதிடும்போது, “மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் கடந்த, 1862, 1902 ஆகிய ஆண்டுகளில் சிலர் தர்கா அருகில் தீபம் ஏற்ற முயன்றபோது அது தடுக்கப்பட்டது.
இதையடுத்து, 1994-ம் ஆண்டு தர்கா அருகில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தர்கா அருகில் தீபம் ஏற்றுவது மரபு கிடையாது, எனவே கோரிக்கை ஏற்க முடியாது என தெளிவுபடுத்தியுள்ளது.
அதேபோல், தர்கா சார்பில் நெல்லித் தோப்பு பகுதியில் விலங்குகளை பலியிட்டு வழிபட அனுமதிக்க முடியாது. நூற்றாண்டு பழமையான நடைமுறையை மாற்ற முடியாது, கடைபிடிக்கப்படாத புதிய மரபுகளை மத வழிபாடு எனக்கூறி சேர்க்கவும் முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும், மலையில் உள்ள கோயிலுக்கு அருகேதான் 150 ஆண்டுகளுக்கு மேலாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகே தீபம் ஏற்றப்பட்ட வரலாறு கிடையாது, எனவே, தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. தற்போது கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்தால் பின்னர் அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைப்பார்கள், இது பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்” என வாதிட்டார்.
ராம ரவிக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன் மற்றும் வழக்கறிஞர் லக் ஷ்மண் ராஜா ஆகியோர், “தர்காவுக்கு படிக்கட்டுகள், கொடிமரம், புது மண்டபம் என அனைத்தையும் சேர்த்து 86 சென்ட் நிலம்தான் சொந்தமாக உள்ளது, ஆனால், கோயிலுக்கு 171.17 ஏக்கர் நிலம் உள்ளது, அந்த குறிப்பிட்ட கல்தூண் கோயில் நிலத்தில் அமைந்துள்ளது. அதில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோருகிறோம்.
தற்போது குறிப்பிட்ட கல் தூணில் விளக்கு ஏற்றும் வகையில் குழிவான அமைப்பு இருக்கின்றது அதில் நெய் ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்றினால் இரண்டு மணி நேரம் தீபம் அணையாமல் எரியும். தமிழகத்தில் மருதமலை, சுவாமிமலை, பழனி மலை முருகன் கோயில்களிலும் இவ்வாறுதான் தீபம் ஏற்றப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு நாள் 2 மணி நேரம் மட்டும் அந்த குறிப்பிட்ட கல்தூணில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டு விடப்போகிறது” என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.