

புதுடெல்லி: ‘‘உலகளவில் அரசியல் நெருக்கடி நிலவும் நிலையில், இந்தியா - பிரான்ஸ் இடையிலான கூட்டாண்மை உயிர்நாடியாக உள்ளது’’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.
இந்தோ - பிரெஞ்சு சட்ட மற்றும் வணிக கருத்தரங்கு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, சர்வதேச கட்டமைப்பை சீர்குலைக்கும் நிலையில், இந்தியா - பிரான்ஸ் இடை யிலான கூட்டாண்மை என்பது ஆடம்பரம் அல்ல. இது ஒரு உயிர்நாடி.
இரு நாடுகள் இடையிலான உறவு நீண்ட காலமாக தூதரக உறவைத் தாண்டி, ஒரு பல பரிமாணக் கட்டமைப்பாக மாறியுள்ளது. இது பாதுகாப்பு ஒத்துழைப்பு முதல் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பகிர்தல் வரை அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.
கடந்த 2009-10-ம் ஆண்டில் 6.4 பில்லியன் டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகம், கடந்த நிதியாண்டில் 15.11 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையிலான உறவு பல நூற்றாண்டுகளாக உருவான ஒரு பிணைப்பு. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியான, நீதியான உலக ஒழுங்கைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் இரு நாடுகளும் கொண்டுள்ள நம்பிக்கையால் அவை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
2026-ம் ஆண்டு கண்டுபிடிப்புக்கான ஆண்டு. இதன் விளிம்பில் நாம் நிற்கும்போது, நாம் இனி வெறும் கூட்டை மட்டும் கட்டவில்லை, நாம் பறப்பதற்கான வானத்தையே உருவாக்குகிறோம். இந்தியா மற்றும் பிரான்ஸ் இந்த ஆண்டு கண்டுபிடிப்புக்கான புதிய யுகத்தில் நுழையும்போது, ஒரு வலுவான வழக்கு தீர்வு கட்டமைப்பின் ஆதரவுடன் இதை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
பயிற்சி பெற்ற சட்ட நிபுணர்களை கொண்டு இரு நாடுகள் இடையே கூட்டு சமரசரக் குழுக்களை உருவாக்க வேண்டும். இத்தகைய நிபுணர் குழுக்கள், தொழில்நுட்ப மேன்மை மட்டுமன்றி, சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு தேவையான கலாச்சார, நீதித்துறை தகவல்களை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.