

புதுடெல்லி: அமலாக்கத் துறை சோதனை நடைபெறும் போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேற்கு வங்கத்தில் ஐ-பேக் அலுவலகத்தில் சமீபத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது திடீரென அந்த அலுவலகத்துக்குள் முதல்வர் மம்தா பானர்ஜி நுழைந்தார். அங்கிருந்து ஆவணங்கள், லேப் டாப் போன்றவற்றை எடுத்துக் கொண்டு சென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஷ்ரா, என்.வி. அஞ்சரியா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மேற்கு வங்க அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி, "மத்திய அரசின் அமைப்பான அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மாநில அரசுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்ய அனுமதிப்பது கூட்டாட்சி அமைப்புக்கு ஆபத்தாகிவிடும். இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறைக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. இது சிபிஐ, போதை பொருள் தடுப்பு பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஆகிவற்றுக்கும் பொருந்தும்" என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி பிரசாந்த் குமார் மிஷ்ரா குறுக்கிட்டு, "இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என்றால் யார் தீர்வு காண்பது ? மத்திய அரசின் விசாரணை அமைப்பு பணிகளை செய்யவிடாமல் மாநில முதல்வர் தடுப்பது வழக்கத்துக்கு மாறானது. இன்னொரு சந்தர்ப்பத்தில் மற்றொரு மாநிலத்தின் முதல்வர் அமலாக்கத்துறை சோதனையின்போது நுழைந்தால் என்னதான் தீர்வு. தீர்வே இல்லாமல் அமலாக்கத்துறை செல்ல வேண்டுமா ?" என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், அரசமைப்பு சாசனத்தின் 300-வது பிரிவின் கீழ் மத்திய அரசு வழக்கு தொடர முடியும் என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, "மாநில அரசுகளுக்கு எதிராக அமலாக்கத் துறை உயர் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ள ரிட் மனுக்களுக்கு எதிராக கேரளா, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களை மற்றொரு அமர்வு விசாரித்து வருகிறது" என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களுக்கு பிறகு விசாரணையை உச்ச நீதிமன்றம் மார்ச் 24ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.