

பாராமதி: மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) மூத்த தலைவருமாக இருந்த அஜித் பவார், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விமான விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் கட்சியில் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், ஆட்சியில் என்சிபி கட்சிக்கான முக்கியத்துவம் குறையாமல் இருக்கவும், அஜித் பவாரின் மனைவியும், மாநிலங்களவை எம்.பியுமான சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் துணை முதல்வராக பதவியேற்றார். அத்துடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, அஜித் பவார் இறந்ததால் காலியாக இருந்த பாராமதி தொகுதிக்கு வரும் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் மகாயுதி கூட்டணி சார்பில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
அஜித் பவார் மீதான மரியாதையின் காரணமாக எதிர்க்கட்சிகளான முன்னாள் முதல்வர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி), முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (உத்தவ் பிரிவு) ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் மட்டும் ஆகாஷ் மோரே வேட்பாளராக களம் இறக்கப்பட்டு இருந்தார்.
இவரது வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், வேட்பு மனு வாபஸ் பெறும் நாளான நேற்று திடீர் திருப்பமாக அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதனால், பாராமதி தொகுதியில் சுனேத்ரா பவார் போட்டியின்றி தேர்வாக உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.