

புதுடெல்லி: நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னம் பெற முயன்ற வழக்கு, பிரபல தொழிலதிபரிடம் பல நூறு கோடி மோசடி செய்தது உள்ளிட்ட பல வழக்குகளில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஊழல் வழக்கில் காவலில் இருந்த போது, சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் தனிச் செயலாளர் எனவும், பின்னர் அந்த நீதிபதியே பேசுவதாகவும் கூறி, சுகேஷுக்கு உடனடியாக ஜாமீன் அல்லது இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் நீதிபதி பூனம் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அத்தகைய கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து நீதிபதி பூனம் சவுத்ரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாகத் திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகர் குற்றவாளி என திஸ் ஹசாரி நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கான தண்டனை விவரத்தைத் தலைமை குற்றவியல் நடுவர் ஹர்ஷிதா மிஸ்ரா நேற்று அறிவித்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் 170-வது பிரிவின் கீழ் அரசு ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்ததற்கும், 189-வது பிரிவின் கீழ் அரசு ஊழியரை மிரட்டியதற்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 507-வது பிரிவின் கீழ் குற்றவியல் மிரட்டலுக்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
இந்தத் தண்டனைகள் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதேவேளையில், இந்த தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், கருணை காட்ட வேண்டும் என்றும் சுகேஷ் சந்திரசேகர் முன்வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.