

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று உலக நாடோடிகள் விளையாட்டுப் போட்டி தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஒரே காரில் சென்றனர்.
பிஷ்கெக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜபரோவ், அர்மீனியா பிரதமர் நிகோல் பாஷின்யான் ஆகியோரைப் பிரதமர் மோடி நேற்று தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
மோடி - புதின் சந்திப்பு: இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்றிரவு அவர் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு தனித்துவமானது, சிறப்புமிக்கது. இரு நாடுகளின் நட்புறவு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
ரஷ்யாவும் உக்ரைனும் அமைதிக்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும். மனித குலத்துக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். முடிவில்லாத போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. இந்த விவகாரத்தில் உதவ இந்தியா தயாராக உள்ளது.
செப்டம்பர் 12, 13-ம் தேதிகளில் இந்திய தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதினுக்குச் சிறப்பு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், ‘‘ரஷ்யா - இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவரை மனதாரப் பாராட்டுகிறேன்’’ என்றார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் 6-வது உலக நாடோடிகள் விளையாட்டுப் போட்டி தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் மோடியும் அதிபர் புதினும் ஒரே காரில் சென்றனர். தொடக்க விழா மேடைக்கு இருவரும் ஒன்றாக நடந்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எஸ்சிஓ மாநாட்டில் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார்.