

புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் சுகோய் போர் விமானம் விபத்தில் சிக்கியதில் 2 பைலட்கள் உயிரிழந்தனர்.
அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் போர் விமானம் நேற்று முன்தினம் பயிற்சிக்காக சென்றது. இதில் பிளைட் லெப்டினன்ட் பர்வேஸ் துரக்கர் (28), ஸ்குவார்டர்ன் லீடர் அனுஜ் ஆகியோர் சென்றனர்.
சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தை தேடிய போது, அசாம் மாநிலம் கார்பி அங்கிலாங் பகுதியில் நொறுங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாயமான பைலட்களை தேடும் பணி தொடங்கியது.
இந்நிலையில் அந்த விமானத்தில் சென்ற இரு பைலட்களும் உயிரிழந்ததாக விமானப்படை நேற்று அறிவித்தது. இவர்களில் பர்வேஸ் துரக்கர் கடந்தாண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பர்வேஸ் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் விமானப்படையில் சேர்ந்தார்.