

கோப்புப்படம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைக்க குழு ஒன்றை முதல்வர் உமர் அப்துல்லா அமைத்தார். ஒராண்டுக்கு மேலாகியும் இந்த குழுவின் அறிக்கை வெளியாகவில்லை.
இதனால் காஷ்மீர் மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இவர்களுக்கு மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. சையத் ருஹல்லா மெஹ்தி, பிடிபி தலைவர் வகீத் பாரா, நகர் முன்னாள் மேயர் ஜுனைத் மாத்து ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இவர்கள் மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்க, நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இது குறித்து வகீத் பாரா கூறுகையில், ‘‘இடஒதுக்கீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் எண்ணம் உமர் அப்துல்லா அரசுக்கு இல்லை. இதற்காக முதல்வர் உமர் அப்துல்லா வீடு முன் ஓராண்டுக்கு முன்பே போராட்டம் நடத்தினோம். இடஒதுக்கீடு அறிக்கையை பொதுவில் வெளியிட வேண்டும். உமர் அப்துல்லாவால் அமைக்கப்பட்ட அமைச்சரவை துணைக் குழுவின் அறிக்கையை நிறுத்தி வைப்பது நியாயம் அல்ல’’ என்றார்.
ருஹல்லா மெஹ்தி கூறுகையில், ‘‘எங்கள் வீட்டு முன் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தை தடுக்க, இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையா?” என்றார்.