புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2006-ல் ஏற்பட்ட வன்முறையால் கலைக்கப்பட்ட ஜாமியா மாணவர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தக் கோரி, அக்டோபர் 12 முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டத்தை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அது பலன் தரவில்லை. ஜாமியா மிலியா பல்கலை மாணவர் சங்க அரசியலமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவாளர் மஹ்தாப் ஆலம் ரிஸ்வி தெரிவித்தார். ஆனால், அதனை மாணவர்கள் ஏற்கவில்லை. தேர்தல் நடத்துவதற்கான தெளிவான கால அட்டவணை வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர். அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் உறுதியாக கூறியிருந்தனர்.
இந்நிலையில், மாணவர் சங்க தேர்தல் உட்பட மூன்று கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக பதிவாளர் மஹ்தாப் ஆலம் ரிஸ்வி கூறியுள்ளார்.
“மாணவர்கள் எங்களிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். அந்த மூன்றையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஜாமியா மிலியா பல்கலை மாணவர் சங்க அரசியலமைப்புக்கு வரும் 2027, மே 15-ம் தேதிக்குள் ஒப்புதல் கிடைக்கும். இதில் மாணவர்களின் பிரதிநிதிகளும் இருப்பார்கள்.
கல்வியாண்டு தொடங்கிய ஆறு வாரங்களில் மாணவர் சங்க தேர்தல் நடைபெறும் என்று உறுதி அளித்துள்ளோம். உத்தேசமாக 2027, ஜூலை 16-ம் தேதி கல்வியாண்டு தொடங்கும் என்றால். அதிலிருந்து ஆறு வாரங்களில் தேர்தல் நடத்தப்படும்.
இந்த போராட்டத்தின் போது மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கையும் ரத்து செய்யப்படும். நவ.8-ம் தேதி வரை தீபாவளி விடுமுறை என்பதால் அதன் பின்னர் மாணவர்கள் தங்கள் வகுப்பில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பை மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.