

புதுடெல்லி: மத்தியக் கல்விச் செயலாளராக இருந்த வினீத் ஜோஷி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 28-ம் தேதி போராட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் மத்தியக் கல்வி செயலாளராக இருந்த வினீத் ஜோஷி பணியிட மாற்றம் செய்யப்பட்டு பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1992-ம் ஆண்டு மணிப்பூர் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான வினீத் ஜோஷி, கான்பூர் ஐஐடி.யில் பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் கல்வித் துறை செயலாளராக கடந்த 2025-ல் பொறுப்பேற்றார். அதன்பின் அவருக்கு யுஜிசி தலைவர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. இவர் மணிப்பூர் மாநில தலைமை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
அவருக்கு பதில் கல்வித் துறை புதிய செயலாளராக நரேஷ் பால் கங்க்வர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994-ம் ஆண்டு மேற்கு வங்க பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. இதற்கு முன் இவர் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளராக பணியாற்றினார். டெல்லியில் மாணவர்கள் போரட்டத்துக்கு மத்தியில் கல்வித் துறைச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.