போர்ச் சூழலில் எரிபொருள் நெருக்கடியை சமாளித்தது எப்படி? - பிரதமர் மோடி விவரிப்பு

பெங்களூருவில் பிங்க் லைன் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்து பேச்சு
போர்ச் சூழலில் எரிபொருள் நெருக்கடியை சமாளித்தது எப்படி? - பிரதமர் மோடி விவரிப்பு
Updated on: 
2 min read

பெங்களூரு: ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் போர்கள், எரிசக்தி பாதுகாப்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்த்தியுள்ளது என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகளில் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்த நெருக்கடியைச் சமாளிக்க நமக்கு உதவியுள்ளன என கூறியுள்ளார்.

பெங்களூருவில் பிங்க் லைன் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தல், புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தல், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட 4 ரயில் நிலையங்களை திறந்து வைத்தல் உள்ளிட்ட ரூ. 15,600 கோடிக்கும் அதகமான மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.13) தொடங்கிவைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதன் மூலம், மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.

எந்தவொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் உள்கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகள் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பு, தொழில்துறைக்கான புதிய வாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்குகின்றன. இத்தகைய வளர்ச்சி வாய்ப்புகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடையும்போது வறுமைக்கு எதிரான போராட்டம் மேலும் வலுவடைகிறது. இதன் காரணமாகவே, கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் சுமார் 50 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் போர்கள் எரிசக்தி பாதுகாப்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்த்தி உள்ளன. இந்த காலம் இந்தியாவுக்கும் சவாலான ஒன்றாகவே இருந்தது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இந்த நெருக்கடியைச் சமாளிக்க நமக்கு உதவி உள்ளன.

பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் உற்பத்தித் திறனை நாங்கள் அதிகரித்துள்ளோம். கச்சா எண்ணய் சேமிப்பு வசதிகளை உருவாக்கி உள்ளோம். சூரிய ஆற்றல், நீர்மின்சாரம், காற்றாலை ஆற்றல் ஆகியவற்றின் பயன்பாட்டை விரிவுபடுத்தி உள்ளோம். ரயில்வே துறையில் கிட்டத்தட்ட 100% மின்மயமாக்கலைச் சாதித்துள்ளோம். மேலும், மெட்ரோ போக்குவரத்து அமைப்புகளை வலுப்படுத்தி உள்ளோம். மின்சார உற்பத்தி என்பது எரிசக்தி பாதுகாப்பின் மிக முக்கிய அம்சமாகும்.

இன்று சூரிய ஆற்றல் முதல் பிற வளர்ந்து வரும் எரிசக்தி தீர்வுகள் வரை, புதிய தொழில்நுட்பங்களில் முன்னிலை வகிக்கும் இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் தற்போது 300 ஜிகாவாட் அளவை கடந்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களின் பலனாக மக்கள் தற்போது மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், அதை உற்பத்தி செய்பவர்களாகவும் மாறி வருகின்றனர். வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் எரிசக்திப் பாதுகாப்புடன் இணைப்பு வசதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன” என தெரிவித்தார்.

போர்ச் சூழலில் எரிபொருள் நெருக்கடியை சமாளித்தது எப்படி? - பிரதமர் மோடி விவரிப்பு
தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து

X