

அகமதாபாத்: இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய மருத்துவ மாநாடு குஜராத்தின் ஷேலா நகரில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
நாட்டில் மலேரியா பாதிப்பு 97 சதவீதம் குறைந்துள்ளது. இது விரைவில் ஒழிக்கப்படும். இதற்காக ஆயுஷ்மான் பாரத் மற்றும் இந்திரா தனுஷ் போன்ற திட்டங்களுக்கு நன்றி. டெங்குவால் ஏற்படும் இறப்பும் ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிரசவ மரணம் 25 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு சுகாதார பட்ஜெட் ரூ.37,000 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.1.28 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமரின் தொலைநோக்கை நனவாக்க ஆரோக்கியமான மக்கள் தொகை அவசியம். இதற்கு மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் பங்கு மிக முக்கியம். ஆரோக்கியமான மக்கள் தேவை என்பதற்காகத்தான் தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத், ஃபிட் இந்தியா இயக்கம், கேலோ இந்தியா போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
பொது மருந்துகளுக்கான ஜிஎஸ்டி நீக்கப்பட்டுள்ளதால், தற்போது அவை குறைவான விலையில் கிடைக்கின்றன. நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனையை விரிவுபடுத்தி வருகிறோம். வீடியோகிராபி மூலம் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு எய்ம்ஸ் மூலம் வழிகாட்டும் திட்டத்தை தொடங்கவுள்ளோம்.
மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் கிடைக்கும் வகையில், இந்திய மருத்துவ சங்கத்தின் பங்களிப்பு மற்றும் பணிகள் இருக்க வேண்டும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் மலிவு விலை மருந்துகளை சில மருத்துவர்கள் அலட்சியப்படுத்த முயற்சிக்கின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும். சுகாதாரத் துறையில் வெற்றிடத்தை போக்க இந்த திட்டங்கள் அவசியமானது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.