“காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசின் மவுனம் நியாயமற்றது” - சோனியா காந்தி

“காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசின் மவுனம் நியாயமற்றது” - சோனியா காந்தி
Updated on
2 min read

புதுடெல்லி: காசாவில் நடைபெறும் இனப்படுகொலை விவகாரத்தில் மோடி அரசின் மவுனம் பகுத்தறிவு ரீதியாகவோ தார்மீக ரீதியாகவோ நியாயப்படுத்த முடியாதது என்று சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், இஸ்ரேலிய அதிகாரிகள் பாலஸ்தீன குழந்தைகளையும் குறிவைப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தப் பேட்டியில், ”ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் குறித்த ஐநாவின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம், காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய அதிகாரிகள் இனப்படுகொலையை நிகழ்த்தி வருவதாக 2025 செப்டம்பரில் அறிவித்தது.

புகழ்பெற்ற சட்ட நிபுணரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான எஸ். முரளிதர் தலைமையில் தற்போது இயங்கும் அதே ஆணையம் 2026 ஜூன் மாதத்தில் 94 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பாலஸ்தீனர்களின் குழந்தைகளை குறிவைப்பதன் மூலம் அவர்களின் இருப்பையே அழிக்கும் நோக்குடன் இஸ்ரேல் செயல்படுவதாகக் கூறியுள்ளது.

மனதை உலுக்கும் இந்த ஆவணத்தில் குறைந்தது 20 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பாலஸ்தீனர்களில் 27% பேர் குழந்தைகள் என்றும், காசாவில் பிரசவ கால சிக்கல்கள் 300% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள சோனியா காந்தி, அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கிலான இஸ்ரேலின் தாக்குதலையும் கண்டித்துள்ளார். மேலும், இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான பதில் நடவடிக்கை விவகாரத்தில் இந்திய அரசு கடைப்பிடித்து வரும் மவுனம் நியாயப்படுத்த முடியாதது என்று அவர் விமர்சித்துள்ளார்.

“காசா இனப்படுகொலைக்கு எதிரான புதிய விவாதங்களையும் செயல்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ள நீதிபதி முரளிதரின் அறிக்கை குறித்து நரேந்திர மோடி அரசு எவ்வித எதிர்வினையையும் ஆற்றால் மவுனம் சாதித்து வருகிறது.

ஆனால், இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனெனில், 2020ம் ஆண்டு டெல்லி கலவரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுக்கள் குறித்து டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டியதற்காக நீதிபதி முரளிதர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதை நாம் நினைவு கூர வேண்டும்” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காசாவில் பாலஸ்தீன சிறுமி ஒருவர் சந்தித்த துயரத்தை வெளிப்படுத்தும் ஹிந்த் ரஜாப் திரைப்படத்தை மத்திய அரசு தடை செய்ததை சோனியா காந்தி தனது கட்டுரையில் கடுமையாக கண்டித்துள்ளார். “காசாவில் இஸ்ரேல் நிகழ்ந்தும் துயரத்துக்கு ஹிந்த் ரஜாப் என்ற சிறுமியின் சோகக் கதை ஒரு சான்றாகத் திகழ்கிறது. வெறும் ஐந்து வயதே ஆன அச்சிறுமி, தனது குடும்பத்தினருடன் காசா நகரில் இருந்து வெளியேற முயன்றபோது இஸ்ரேலியப் படைகள் அவர்கள் சென்ற கார் மீது 335 முறை துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில், அக்குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். அக்குழந்தையின் உறவினர்களின் சடலங்களுக்கு இடையே அவள் காருக்குள் சிக்கிக்கொண்டாள்.

குழந்தையை மீட்க மருத்துவக் குழுவினர் முயன்ற நிலையில் இறுதியில் அவளும் அந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். உலக குடிமக்களான இந்தியர்களுக்கு ஹிந்த் ரஜாப் மற்றும் எண்ணற்ற பாலஸ்தீன குழந்தைகளின் கதையைத் தெரிந்துகொள்ளும் உரிமை உள்ளது.

இஸ்ரேலின் உணர்வுகளை மதிக்கும் வகையில் இந்தியாவில் இத்திரைப்படம் பல மாதங்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. மக்களின் எதிர்ப்பை அடுத்தே தற்போது இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் மவுனமும் செயலற்ற தன்மையும் தார்மீக ரீதியில் கண்டிக்கத்தக்கவை மட்டுமல்ல, தேசிய நலன் சார்ந்தும் விளக்க முடியாதவையாகவே உள்ளன” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

“காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசின் மவுனம் நியாயமற்றது” - சோனியா காந்தி
தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in