

புதுடெல்லி: ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி அரசு சீர்குலைத்துவிட்டது’’ என காங். மூத்த தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை பலவீனப்படுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், நிலமற்ற விவசாயிகள் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக, கிராமப்புற ஏழைகளின் நலனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஏழைகளின் வாழ்வாதாரத்துக்காக கொண்டுவரப்பட்ட புரட்சிகரமான நடவடிக்கை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். இதன் மூலம் தொழிலாளர்கள் இடம் பெயர்வது முடிவுக்கு வந்தது. வேலைவாய்ப்புக்கு சட்ட உரிமை வழங்கப்பட்டது.
கிராம சுயராஜ்ஜியம் என்ற காந்தியின் தொலைநோக்கை நனவாக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் புல்டோசரை ஏற்றி மோடி அரசு நாசமாக்கிவிட்டது. இத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் மட்டும் நீக்கப்படவில்லை. இத்திட்டத்தின் முழு வடிவமும், எந்த ஆலோசனையும் இன்றி மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.