

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அம்ரிதபுரியில் அம்ரிதா விஷ்வ வித்யாபீட வளாகம் அமைந்துள்ளது. இதன் நிறுவனர் மாதா அமிர்தானந்தமயியின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று தொடங்கவுள்ளது.
இன்று காலை அம்ரிதபுரி வரும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் 11 மணிக்கு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.
இதனிடையே நேற்று மாலை அம்ரிதபுரி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாதா அமிர்தானந்தமயியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை அமித் ஷா தொடங்கி வைத்தார். இன்று காலை நடைபெறவுள்ள கொண்டாட்ட நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், முதல்வர் வி.டி. சதீஷன், மத்திய அமைச்சர்கள் கே.ராம்மோகன் நாயுடு, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, கேரள அமைச்சர்கள் ரமேஷ் சென்னிதலா, கே.முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின்போது கோவா முன்னாள் ஆளுநரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான பி.எஸ்.தரன் பிள்ளைக்கு அம்ரித கீர்த்தி விருது வழங்கப்படவுள்ளது. அசாம் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.2 கோடி நிதி, அமிர்தானந்தமயி மடம் சார்பில் வழங்கப்படவுள்ளது.