

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் கிளை அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் 7 முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டா கிராம் மற்றும் வாட்ஸ்- அப் போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் பெண் ஊழியர்களுக்குத் தேவையற்ற குறுஞ் செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்ததாக கைதானவர்களே வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனுப்பிய ஆபாசக் கருத்துகள், சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் உரையாடல்களைக் காவல் துறையினர் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளின் செல்போன்கள் மற்றும் சமூக வலைதளக் கணக்குகளில் இருந்து அழிக்கப்பட்ட உரையாடல்களைத் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் மீட்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மகாராஷ்டிர காவல் துறை, டிசிஎஸ் நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.