

புதுடெல்லி: இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வயது அடிப்படையில் கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து பல்வேறு சமூக வலைதள நிறுவனங்களுடன் அரசு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
ஒவ்வொரு நாட்டின் கலாசார சூழலையும் பன்னாட்டு நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். டீப்ஃபேக் காணொலிகளைக் கண்டறிந்த 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. தற்போது ‘டீப்ஃபேக்'
எனப்படும் போலி காணொலிகள் மற்றும் வயதுக் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இப்போதுள்ள சூழ்நிலையில் சிறுவர்களுக்கு சமூக வலைதள அனுமதி அவசியமா என்பது குறித்து மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பின்பற்றப்படும் நடைமுறைகளை அரசு ஆய்வு செய்து வருகிறது. எனினும், ஆஸ்திரேலியாவைப் போல 16 வயதுக்கு உட்பட்டோருக்கு முழுமையான தடை விதிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசிடம் தற்போதைக்கு இல்லை.
2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக ஒழுக்க நெறிமுறைகள்) விதிகளில் இதற்காக திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.