

புதுடெல்லி: கொல்கத்தா- குவாஹாட்டி இடையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைப்பார் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. விரைவான பயணம், வசதியான இருக்கைகள், ஏ.சி. வசதி, பயோ கழிப்பறை, தானியங்கி கதவுகள், சிசிடிவி கண்காணிப்பு என பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதி நவீன வசதிகளை கொண்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த ரயில்களில் தற்போது இருக்கை வசதி மட்டுமே உள்ளது. இந்நிலையில் நீண்ட தூர இரவு நேரப் பயணத்துக்காக தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் ரயில் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் இருந்து அசாமின் குவாஹாட்டி வரை இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் கூறியதாவது: கொல்கத்தா - குவாஹாட்டி இடையிலான ஸ்லீப்பர் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த ரயிலின் கட்டணங்கள் விமானக் கட்டணத்தை விட கணிசமாக குறைவாக இருக்கும். இதன் சேவை அடுத்த 15- 20 நாட்களில், ஜனவரி 18 அல்லது 19ம் தேதி வாக்கில் செயல்பாட்டுக்கு வரும். இதனை தொடங்கிவைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அடுத்த 2-3 நாட்களில் தேதியை அறிவிப்பேன்.
குவாஹாட்டி- ஹவுரா விமானப் பயணத்துக்கு சுமார் ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை செலவாகும். வந்தே பாரத் ரயிலில் உணவு உட்பட 3-ம் வகுப்பு ஏசி கட்டணம் சுமார் ரூ.2,300 ஆகவும், 2-ம் வகுப்பு ஏசி சுமார் ரூ.3,000 ஆகவும், 1-ம் வகுப்பு ஏசி சுமார் ரூ.3,600 ஆகவும் இருக்கும். நடுத்தர வர்க்கத்தினரை கருத்தில் கொண்டு இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.