

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 2.88 கோடி வாக்காளர்கள் தங்களுக்கான எஸ்ஐஆர் படிவங்களை வாங்க வரவில்லை. இதற்கு நிரந்தர இடம் பெயர்வு காரணம் என தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், 2.88 கோடி பேர் தங்களுக்கான படிவங்களை வாங்க வரவில்லை. இவர்களில் 1.30 கோடி பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்திருந்தது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது அடையாளம் காணப்பட்டது. இவர்களின் சதவீதம் மொத்த வாக்காளர்களில் 8.4 சதவீதமாக உள்ளது.
அடுத்ததாக கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்களாக 79,52,190 பேர் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 5.15 சதவீதமாக உள்ளது. இவர்கள் பெரும் பாலானோர் தற்காலிகமாக இடம் பெயர்ந்தவர்கள், வீடு மாறியவர்கள், தவறான முகவரியை உடையவர்களாக உள்ளனர்.
மொத்த வாக்காளர்களில் 46,23,796 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 2.99 சதவீதமாக உள்ளனர். 25,47,207 வாக்காளர்கள் வேறு இடங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். 7,74,472 படிவங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், தவறான தகவல்களுடனும் உள்ளன.
இங்கு வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்த பட்டியலில் விடுபட்டவர்கள், பிப்ரவரி 27-ம் தேதி தங்களுக்குரிய படிவங்களை வழங்கி பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் 6-ம் தேதி வெளியிடப்படும் என உத்தர பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார்.