

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு மருத்துவத் தம்பதி தனியார் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இவர்கள் பல்வேறு தரகர்கள் மூலம் சிறுநீரகம், கல்லீரலை சட்டவிரோதமாகப் பெற்று நோயாளிகளுக்கு பொருத்தி வந்துள்ளனர்.
இந்த தகவல் உ.பி. உளவுப்பிரிவுக்கு சில நாட்களுக்கு முன்பு கிடைத்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையைத் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில், உடல் உறுப்புகளைப் பணத்துக்காக தானம் செய்தவரும், அதை பெற்றவரும் அறுவை சிகிச்சை செய்த போதே கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.
உத்தரா கண்டைச் சேர்ந்த ஆயுஷ் என்ற பெறுநரையும், ஒரு கொடையாளியையும் உ.பி. அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர். கொடையாளிக்கு யுபிஐ மூலம் ரூ.3.5 லட்சம், ரொக்கமாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மருத்துவத் தம்பதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 60 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது தெரிந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால், இந்த கும்பலுக்கு சர்வதேச தொடர்புகள் இருக்காலாம் என விசாரிக்கப்படுகிறது.
இந்த மோசடியில் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஷிவாம் அகர்வால் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் ஸ்டெதஸ்கோப் சகிதம் மருத்துவராக வலம் வந்துள்ளார். ஒரு சிலரை பண ஆசை காட்டி மருத்துவமனைக்கும் அழைத்து வந்துள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களது பெயர் விவரங்கள் எதுவும் பதிவு செய்யவில்லை.
உ.பி., பிஹார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த மோசடி நடைபெற்றுள்ளது. உறுப்பு வழங்கியவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நோயாளிகளுக்கு ரூ.1 கோடி வரை விற்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.