

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக அதன் தலைவர், செயலர் மாற்றப்பட்டு உள்ளனர். இதுதொடர்பான முறைகேடுகளை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நடப்பாண்டு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்தம் செய்ய ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் (ஓஎஸ்எம்) என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த கோஎம்ப்ட் எஜுடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஓஎஸ்எம் டிஜிட்டல் மதிப்பீட்டுக்கான கட்டமைப்புகளைச் செய்து கொடுத்தது.
இந்தச் சூழலில் கடந்த மே 13-ம் தேதி சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போது முதல் மாணவ, மாணவிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. டெல்லியைச் சேர்ந்த மாணவர் வேதாந்த், இயற்பியல் தேர்வில் 65 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். மதிப்பெண் குறைவாக இருந்ததால் சந்தேகமடைந்த அவர், இயற்பியல் பாடத்துக்கான விடைத்தாள் நகலைக் கேட்டுப் பெற்றார். அந்த விடைத்தாள் வேறு ஒருவருடையது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த வேதாந்த், சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் இ-மெயில் வாயிலாக புகார் அளித்தார்.
மேலும், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை சேர்ந்த மாணவர் சர்தாக், ஓஎஸ்எம் டிஜிட்டல் திருத்தப் பணிக்காகத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.
இந்தச் சூழலில் சிபிஎஸ்இ சார்பில் மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்காகத் தனி போர்ட்டல் தொடங்கப்பட்டது. இந்த தளத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், வெறும் 2 நிமிடங்களுக்குள் போர்ட்டலுக்கு 15 லட்சம் ஹிட்ஸ் (வருகைகள்) வந்துள்ளன. இது குறித்து சிபிஎஸ்இ எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிபிஎஸ்இ மறுமதிப்பீடு போர்ட்டல் தற்போது ஒரே நேரத்தில் 8,000-க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு தடையின்றி சேவைகளை வழங்கி வருகிறது. மதியம் 3 மணி வரை 16,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை வெற்றிகரமாக சமர்ப்பித்துள்ளனர்.
இன்று (நேற்று) ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிபிஎஸ்இ மறுமதிப்பீடு போர்ட்டலைப் பயன்படுத்திய வேளையில், மர்ம நபர்கள் தொடர்ச்சியான சைபர் தாக்குதல்கள் மூலம் சேவைகளைச் சீர்குலைக்க முயன்றனர். இதில் 'டினையல் ஆஃப் சர்வீஸ்' தாக்குதலால் வெறும் 2 நிமிடங்களில் போர்ட்டலில் 15 லட்சம் ஹிட்ஸ் பதிவாகின. அதோடு, அனுமதியின்றி கோப்புகளை அணுக 1 லட்சத்துக்கும் அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங், செயலர் ஹுமான்ஷு குப்தா ஆகியோர் நேற்று மாற்றப்பட்டனர். சிபிஎஸ்இ ஓஎஸ்எம் டெண்டர் வழங்கப்பட்டதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஒரு நபர் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவின் தலைவராகத் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ராதா சவுகான் நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த 30 நாட்களில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையிடம் குழுவின் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
சிபிஎஸ்இ புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி லோகண்டே பிரசாந்த் சீதாராம் நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய செயலாளராக மூத்த அரசு அதிகாரி வருண் பரத்வாஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.