“விரைவில் சித்தராமையா ராஜினாமா; டிகே சிவகுமார் முதல்வர் ஆகிறார்” - உறுதிப்படுத்திய கர்நாடக அமைச்சர் பாட்டீல்

“விரைவில் சித்தராமையா ராஜினாமா; டிகே சிவகுமார் முதல்வர் ஆகிறார்” - உறுதிப்படுத்திய கர்நாடக அமைச்சர் பாட்டீல்
Updated on
2 min read

பெங்களூரு: “முதல்வர் சித்தராமையா இன்று மாலை 3 மணி அளவில் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். டி.கே. சிவகுமார் புதிய முதல்வராவார்” என மாநில அமைச்சர் ஹெச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் (மே 26) நடைபெற்றது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரந்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும் என்றும் அடுத்த முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்க அவர் விழிவிட வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. மேலும், முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்த பிறகு, அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்றும், கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக உள்ள அவரது மகன் யதீந்திரா அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் சமரச திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து விலக சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. எனினும், கட்சியினர் யாரும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லாமான காவரியில் இன்று காலை உணவு சந்திப்புக்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், ராமலிங்க ரெட்டி, ஹெச்.கே. பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கட்சி மேலிடத்தின் விருப்பத்துக்கு இணங்க முதல்வர் பதவியில் இருந்து தான் விலக உள்ளதாகவும், அடுத்த முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்பார் என்றும் சித்தராமையா அறிவித்தார். மேலும், பதவிக்காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு அளித்ததற்காக அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இதையடுத்து, சித்தராமையாவை, டி.கே.சிவகுமார் ஆரத்தழுவி, அவரது கால்களைத் தொட்டு ஆசி வேண்டினார்.

கூட்டத்துக்குப் பின்னர் வெளியே வந்த அமைச்சர் ஹெச்.கே. பாட்டீல், “முதல்வர் சித்தராமையா இன்று மாலை 3 மணி அளவில் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். டி.கே. சிவகுமாரை புதிய முதல்வராக்க உள்ளதாக அவர் கூறினார். எனவே, டி.கே. சிவக்குமார் முதல்வராவார்” என தெரிவித்தார்.

இதனிடையே, கர்நாடக முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, முதல்வர் சித்தராமையா இன்று பகல் 2.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார். இதையடுத்து மாலை 3 மணிக்கு அவர் செய்தியாளர்களைச் சந்திப்பார் என தெரிவித்துள்ளனர்.

“விரைவில் சித்தராமையா ராஜினாமா; டிகே சிவகுமார் முதல்வர் ஆகிறார்” - உறுதிப்படுத்திய கர்நாடக அமைச்சர் பாட்டீல்
“ஈரான் மீதான பொருளாதார தடைகள் எதுவும் நீக்கப்படாது” - ட்ரம்ப் திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in