

புதுடெல்லி: நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு தாக்குதலின் எதிரொலியாக பாலிவுட் பிரபலங்களுக்கு மும்பை காவல்துறை பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்தமாதம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், பொறுப்பேற்றிருந்தது. எனினும், இந்தத் தாக்குதலில் நடிகர் ஷெராப் தப்பி விட அவரது வாகன ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். இதையொட்டி, மும்பை காவல்துறை சார்பில் பல முக்கிய பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு பாதுகாப்பு எச்சரிகை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையில், பாலிவுட் பிரபலங்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், பொது இடங்களில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்ஃபி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று மும்பை போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து மும்பை காவல் துறை வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்த நிழல் உலக தாதா கும்பல்களிடமிருந்து யார் யாருக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தன என்ற தகவல்கள் போலீஸாருக்குத் தெரிந்திருந்தன.
அதற்கேற்ப அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், நடிகர்களான ரோஹித் ஷெட்டி, டைகர் ஷெராப் ஆகியோருக்கு எந்தவித மிரட்டல் அழைப்புகளும் வராமலேயே குறிவைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட மும்பை போலீஸார், பாலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் அனைவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மறுஆய்வு செய்து வருகின்றனர்.
டைகர் ஷெராப் துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதானவர்களின் விசாரணையில், வேறு எந்தெந்த நடிகர்களின் வீடுகளை அவர்கள் கண்காணித்தனர் என்பது குறித்த தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பல பிரபலங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,’’ என்று தெரிவிக்கின்றன.